Saturday, February 4, 2017

தமிழ் தேசிய தலைவர் பொன்பரப்பி தமிழரசன்

தமிழ் தேசிய தலைவர் பொன்பரப்பி தமிழரசன்

அண்ணன்  தமிழரசன் – அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அஞ்சல் வாழ்ந்தவர் சொந்த ஊர் கடலூர் மாவட்டம்  மதகளிர் மாணிக்கம் எனும் கிராமத்தில் துரைசாமி – பதூசி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 1945 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு ஒரு தங்கை உண்டு. கோவையில் B.E. ( Chemical Engr) வேதியியல் பொறியியல் படித்தார்.

இளம் வயதிலேயே பொதுவுடைமைக் கருத்தில் நாட்டம் கொண்ட இவர் 1969 –ல் இந்திய கம்ஸயூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் (ML)-ன் மாபெரும் போராளி சாரும் மஜும்தாரின் அறைகூவலான ’’ மக்கள் விடுதலை” எனும் முழக்கத்தினை ஏற்று மாணவராக இருந்தபோதே அவ்வியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழ்நாட்டில் மா.இலெ. இயக்கங்களில், மொழி நாட்டினச் சிக்கலில் புதிய பார்வையை தோழர் தமிழரசன் உருவாக்கினார். அவர் பஞ்சாப், மணிப்பூர், நாகாலாந்து, காசுமீர் போன்ற மொழி நாட்டினங்களின் கருவிப் போராட்டங்களையும் மற்றும் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டார்.

தமிழீழம், பஞ்சாப், காசுமீர், நாகாலாந்து, மணிப்பூர் போன்ற மொழி நாட்டினங்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையே தொடர்ச்சியாகக் கருவிப் போராட்டம் நடந்து வருகின்றது. அதனால் மொழி, நாடு விடுதலைப் போராட்டங்கள் நடக்கும் இடங்களில் மொழி நாட்டினத்திற்கும், இந்திய ஆளும் வகுப்புக்கும் இடையிலான முரண்பாடு முதன்மையானதாக உள்ளது.
ஆகையால் மா.இலெ. இயக்கங்கள் ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான முரண்பாடு, நிலக்கிழமைக்கும் பரந்து பட்ட மக்களுக்கும் இடையிலான முரண்பாடு, இந்த இரண்டு முரண்பாடுகளையும் இந்தியப் புரட்சிக்கு அடிப்படை முரண்பாடுகளாக வகுத்துள்ளன.

இவ்வடிப்படை முரண்பாடுகளில் இந்தியாவில் உள்ள மொழி நாட்டினங்களுக்கும் இந்திய ஆளும் வகுப்புகளுக்கும் இடையிலான முரண்பாட்டை மூன்றாவது முரண்பாடாக சேர்க்க வேண்டும் என்று தோழர் தமிழரசன் போராடினார்.

அதே நேரத்தில் இந்திய குமுக (சமூக) அமைப்பு அரை அடிமை, அரை நிலக்கிழமையும் என்பதிலோ, நிலக்கிழமைக்கும் பரந்துபட்ட மக்களுக்கும் இடையிலான முரண்பாடு முதன்மையான முரண்பாடு என்பதிலோ, இந்திய கட்சி என்பதிலோ அவரிடம் எந்த மாற்றமும் இல்லை.

இந்தியாவில் உள்ள அடிப்படை முரண்பாடுகளில் மொழி நாட்டின முரண்பாட்டை மூன்றாவதாகச் சேர்க்க வேண்டும் என்பதோடு அவரின் மார்க்சிய கடமை முடிந்தது.

அதன்பின், இந்தியாவில் முதன்மை முரண்பாடு எது? இந்தியக் குமுக அமைப்பு என்ன? இந்தியக் கட்சியா அல்லது மொழி நாட்டினக் கட்சியா என்பதில் எந்தவித முடிவுக்கும் வராமல் தடுமாறினார். தோழர்கள் புலவர் கலியபெருமாள், பொன்பரப்பி இராசேந்திரன், புதுவை தமிழ்ச்செல்வன் இவர்கள்தாம் தமிழ்நாடு கட்சி, இந்திய ஆளும் வகுப்புக்கும் தமிழினத்திற்கும் இடையிலான முரண்பாடே முதன்மை முரண்பாடு என்ற முடிவிற்கு வந்தனர்.

இன்றைக்கு தமிழ்நாட்டு விடுதலை இயக்கம் இருக்கிறது என்றால் அதற்கு தோழர் புலவர் கலியபெருமாளே முதன்மையானவர். ஆனால் அடிப்படையில் மொழி நாட்டினச் சிக்கலைப் பற்றி சிந்திக்கக் காரணமாக இருந்தவர் தோழர் தமிழரசனே.

ஒரு கட்டத்தில் தோழர்கள் புலவர் கலியபெருமாளும் புதுவை தமிழ்ச்செல்வனும் அமைப்பிலிருந்து விலகிக் கொண்டனர். தோழர்கள் பொன்பரப்பி இராசேந்திரனும் ஆதமங்கலம் தருமலிங்கமும் அமைப்பில் தொடர்ந்து போராடி, தோழர் தமிழரசனை தமிழ்நாடு விடுதலையை ஏற்க வைத்தனர்.

1986இன் முடிவில் கொல்லிமலையில் நடந்த அமைப்பு மாநாட்டில், தமிழ்நாடு கட்சி அமைப்பு, இந்திய ஆளும் வகுப்புக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான முரண்பாடே முதன்மை முரண்பாடு என்ற அடிப்படையில் தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி (மா.இலெ.)இன் அறிக்கையை தோழர் தமிழரசன் உருவாக்கினார்.

நக்சலைட் இயக்கத்தின் திருப்பு முனையாக இத் தருணத்தில் தோழர் தமிழரசன் உருவாகினார். 1980களில் இந்த இயக்கம் மிக வேகமாக வளர முக்கிய காரணம் தோழர் தமிழரசன் தான். People war Group இயக்கத்தின் பொலிட்பீரோ உறுப்பினராகவும் அவர் உயர்ந்தார். சாதியில்லா சமுதாயம் அமைப்பது, பண்னை நிலங்களை ஏழை மக்களுக்கு கொடுப்பது போன்றவை இவரின் முக்கிய கொள்கைகளாக இருந்தன. அதே சமயத்தில் தமிழ் தேசியம், தனித் தமிழ்நாடு போன்ற கோரிக்கைகளில் நம்பிக்கை உடையவராக தமிழரசன் விளங்கினார்.

1985ம் ஆண்டு தமிழ் ஈழத்திற்கு ஆதராக தமிழகத்தில் உணர்வு அலைகள் கரைபுரண்ட பொழுது, தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் போன்றோர் தங்களை தமிழ்தேசிய உணர்வுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டனர். இதனால் மக்கள் யுத்தக் குழுவில் இருந்து தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் இருவரும் நீக்கப்பட்டனர். இதன் பிறகு தமிழ்நாடு மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சியை இருவரும் துவங்கினர். இக் கட்சியின் ஆயுதப் பிரிவாக “தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA)” என்ற அமைப்பை தோழர் தமிழரசன் தோற்றுவித்தார்.

பொறியியல் பயின்ற தோழர் தமிழரசன் குண்டுகள் தயாரிப்பதிலும் வல்லவராக இருந்தார். 1985ம் ஆண்டு துவங்கி 2000வரை கணக்கெடுத்தால் தமிழத்தின் பல இடங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளை இந்த இயக்கம் நடத்தியது. மைய அரசின் தளங்களை தான் இந்த அமைப்பு குறிவைத்து தாக்கியது. தனித்தமிழ்நாட்டை உருவாக்கி அங்கு சாதிபேதமில்லா சமதர்ம சமுதாயத்தை அமைப்பது தான் தன்னுடைய லட்சியம் என்று தமிழரசன் முழங்குவார். பண்ணைக்காரர்களிடம் இருந்து கைப்பற்றிய பணத்தையும், பொருளையும் ஏழைகளுக்கு அளிப்பார். மக்களை தமிழரசன் மிகவும் நேசித்தார். மக்களுக்காக வாழ்வது தான் அவரது லட்சியமாக இருந்தது.

1987ம் ஆண்டு, செப்டம்பர் 1ம் நாள் பொன்பரப்பி கிராமத்தில், தன் இயக்கத்திற்கு பொருள் சேர்ப்பதற்காக தமிழரசன் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டார். பொன்பரப்பியில் இருந்த ஸ்டேட் பாங்க் வங்கியை கொள்ளை அடித்து விட்டு வெளியேறும் பொழுது அவரை அடையாளம் தெரியாமல், அவர் “தோழர் தமிழரசன்” தான் என்று தெரியாமல் ஊர் மக்கள் தாக்கினர். அப்பொழுது அவரிடம் குண்டுகளுடன் துப்பாக்கி இருந்தது. அந்த துப்பாக்கியை பொதுமக்கள் மீது சுட்டிருந்தால், மக்கள் ஓட்டம்பிடித்திருப்பர். குறைந்தபட்சம் அந்த துப்பாக்கியை பொதுமக்கள் மீது சுடப்போவதாக நீட்டியிருந்தால் கூட மக்கள் நெருங்கியிருக்க மாட்டார்கள். ஆனால் தன் மக்களை மிகவும் நேசித்த தோழர் அவர்களை சுடப்போவதாக கூட சொல்ல வில்லை. எந்த மக்களுக்காக போராடினாரோ, அதே மக்களின் கையில் அடிபட்டு இறந்தார். இதை விட ஒரு சோகமான விடயம் பொன்பரப்பி தமிழரசனின் சொந்த கிராமம். தன்னை வெளிப்படுத்தினால் எங்கே தன்னை ஒரு கொள்ளையனாக தன் ஊர் மக்கள் நினைத்து விடுவார்களோ என்று எண்ணி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலே தோழர் மறைந்து போனார்.

கொல்லப்பட்டது தமிழரசன் தான் என்று பிறகு கேள்விபட்டவுடன் பொன்பரப்பிலும், பிற கிராமங்களிலும் நிலவிய சோகம் இன்றும் என் நினைவில் நிற்கிறது. இப்பகுதி மக்கள் தமிழரசனை நேசித்தனர். அவரது முகம் கூட தெரியாமல் அவரது சேவைகள் மட்டுமே பலர் நினைவில் இருந்தது. இன்றும் நிற்கிறது.

தோழர் தமிழரசனின் ஆயுதப் போராட்டம் இன்றைய காலக்கட்டத்தில் அர்த்தமற்றவையாக தெரியலாம். ஆனால் 1980களில் இப் பகுதியில் நிலவிய வறுமை, அறியாமை போன்றவையுடன் பொருத்தி பார்த்தால் அவருடைய போராட்டத்தின் பொருள் விளங்கும்.

தமிழகத்தின் அத்தனை ஊடகங்களும் இந்த நிகழ்ச்சி குறித்து பொய்க்கதைகளை தான் அவிழ்த்து விட்டனவே தவிர ஒரு பத்திரிக்கை கூட உண்மை நிலையை எழுதவில்லை.

தமிழக வரலாற்றில் மக்களை நேசித்த மாமனிதர்கள் பட்டியலில் தமிழரசனின் பெயர் முக்கியமானது. 
வீரவணக்க நாள் (01.09.1987) 

1 comment :

  1. வன்னியர் மக்கள்தொகை விவரதத்தை குறிப்பிடுங்க? தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களில் எவ்வெவ்வளவு வன்னியர்கள் வாழ்கிறார்? வெளிநாடுகளில் வாழும் வன்னியர் மக்கள்தொகை விவரத்தை குறிப்பிடுங்க?

    ReplyDelete