வன்னியர்கள் குறித்து ஸ்டாலின் கருத்து : மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் எதிர்ப்பு
ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "இடஒதுக்கீடு தொடர்பாக எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற 40000 வன்னியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டதுடன், அப்போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 25 வன்னியர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணமும், மாதம் தலா ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் வன்னியர்களுக்கு திமுக ஆட்சியில்தான் 20 சத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது." என்று தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள மறுமலர்ச்சி வன்னியர் சங்கத்தின் நிறுவனத்தலைவர் எம்.ஜி.மணிவண்ணன், ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:
ஏற்காடு இடைத்தேர்தலில் வன்னியர்களின் வாக்குகளை பெற்றிட திமுக ஆட்சியில்தான் வன்னியர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டதாக ஸ்டாலின் பேசியிருப்பது கண்டனத்துக்குறியது. 20 சதவீத இடஒதுக்கீடு போராட்டத்தில் 25 வன்னியர்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழக்க காரணமே திமுக தான். அதற்கு அண்ணா அறிவாலயம் திறப்பு நிகழ்ச்சியே முக்கியக் காரணமாகும். தவிர, வன்னியர்களான பு.தா.அருள்மொழி, பு.தா.இளங்கோவன், வாழைச்செல்வன், தாராசிங், ராஜேந்திரன் ஆகியோர் ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதும், 50 ஆயிரம் வன்னிய இளைஞர்கள் மீது வழக்கு போட்டு கொடுமைப்படுத்தப்பட்டதும் திமுக ஆட்சியில்தான் நடந்தது.
திமுகவில் தகுதி வாய்ந்த வன்னியர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்காமல் தலைமைக்கு சாதமாக செயல்படுபவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுக் கொண்டுள்ளது. அதற்கு மிசா காலத்தில் திமுகவை வளர்த்த மதுராந்தகம் ஆறுமுகம், மாயவரம் கிட்டப்பா, ஏ.ஜி.கோவிந்தசாமி, செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் ஓரங்கப்பட்டதே உதாரணமாகும். மேலும், வன்னியர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் திமுக, ரூ.10 ஆயிரம் கோடி வன்னியர்களின் பொதுச் சொத்துக்களை மீட்கவும், வன்னியர்களுக்கு பொதுநல வாரியத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிடவும் முன்வரவில்லை.
அதேவேளையில் வன்னியரான என்.ரங்கசாமி புதுச்சேரியில் முதல்வராக இருக்கவும், பாமவுக்கு சட்ட அங்கீகாரம் பெற்றது, மத்தியில் பாஜக ஆட்சியில் இரு அமைச்சர், 5 எம்பி பதவியும், சட்டப் பேரவையில் 23 எம்எல்ஏ பதவியும் கிடைத்தது ஆகியவையும் அதிமுக ஆட்சியில்தான் நடந்தது. தமிழக அரசு வரலாற்றில் அதிமுக ஆட்சியில் தான் 5 அமைச்சர்கள், வாரியத் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சியில் மாவட்ட, ஒன்றியச் செயலர்கள் வன்னியர்கள் அதிகளவில் வாய்ப்பு பெற்றுள்ளனர். வன்னியரான வாழப்பாடி ராமமூர்த்திக்கு மத்தியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் பதவி கிடைக்கவும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவே காரணமாக இருந்தார். அதேசமயம் திமுக கூட்டணியில் இருந்து கொண்டே வாழப்பாடி ராமமூர்த்தியை தோற்கடித்தது. எனவே, வன்னிய சமுதாயத்திலும் சிந்தனைவாதிகள் உருவாகி விட்டதால் வெறும் வாய் பேச்சால் வன்னியர்களை ஏமாற்ற முடியாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (டி.என்.எஸ்)
No comments :
Post a Comment