Tuesday, March 21, 2017

சௌராஷ்ட்ரர்கள் சமூகம்

தமிழ்நாட்டில் 'தமிழ்த்தாய்' வாழ்த்துப் பாட யாருமே முன்வரவில்லை. அழைப்பு விடுத்த அன்றைய முதல்வர் கலைஞருக்கு இது பேரதிர்ச்சி. ஆனால் துணிந்து பாடி வரலாற்றில் இடம்பெற்றார் டி.எம். சௌந்தர்ராஜன். பி. சுசீலாவுடன் இணைந்து அவர் பாடிய 'நீராருங் கடலுடுத்த...' என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான், இன்றைக்கு தமிழ் நெஞ்சங்கள் அனைத்திலும் குடிகொண்டிருக்கிறது. துணிச்சல் மிக்க மதுரைக்காரர் என்று பாராட்டியது கலைஞர் மட்டுமல்ல தமிழ்த்தாயும்தான். அந்தக் குரலில் இருந்த கம்பீரம், தமிழைத் தலைநிமிர வைத்தது.


கோடானகோடி தமிழ் இதயங்களைக் கொள்ளை கொண்ட அந்த வெண்கலக்குரலை தமிழுலகிற்குத் தந்து பெருமை தேடிக் கொண்டது சௌராஷ்ட்ர சமூகம்.

இன்றைக்குத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் விரவியிருக்கும் சௌராஷ்ட்ர சமூகத்தார் பெரும்பாலும் பட்டு நெசவு நெய்பவர்களாகவும் பட்டு நூல் வியாபாரிகளாகவும் இருக்கிறார்கள். அதனால்தான் இவர்களை 'பட்டு நூல்காரர்கள்' என்கிறார்கள்.

குஜராத் பகுதிகளில் உள்ள சௌராஷ்ட்ர இனமக்களே சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இடம்பெயர்ந்து தமிழகம் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவர்களின் வருகை பற்றி பல்வேறு கருத்து முரண்கள் எழுகின்றன.

விஜயநகர ஆட்சியின் போது நாயக்க மன்னர்க ள் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டனர். அப்போது நாயக்க மன்னர்களுக்குப் பட்டாடை நெய்து தருவதற்கு என்றே சில சௌராஷ்ட்ர குடும்பங்களை மதுரையில் குடியேற்றியதாகவே பலரும் கூறுகிறார்கள்.

அப்படி குடியேறியவர்கள் தமிழ்நாட்டுக் கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக தங்களை நிலைநிறுத்திக்கொண்டனர். மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம், பரமக்குடி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஆரணி, சென்னை, கோவை, பெரியகுளம், திருபுவனம் என்று அவர்கள் பரந்து விரிந்து வாழுகிறார்கள்.

இன்றைக்கு சுமார் 20 லட்சம் மக்கள்வரை வாழும் இச்சமூகத்தார் வீட்டில் பேசுவது சௌராஷ்ட்ரம் என்றாலும் அவர்களின் வாழ்வாதார மொழி தமிழ்தான்.

பக்தி இலக்கியத்தில் சௌராஷ்ட்ரர் பங்கு குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. திருபுவனத்தில் தம் வழிபாட்டிற்காக ஒரு பெருமாள் கோயில் கட்டியுள்ளனர். சௌராஷ்ட்ர சபை நடத்தும் 'பக்தபிரகலாத நாடக சபை' நாடகக் கலைக்கு உயிர் ஊட்டி வருகிறது. ஸ்ரீமத் நடனகோபால நாயகி சுவாமிகள் (1843 - 1914) 'மதுரையின் ஜோதி' என்றும் சௌராஷ்ட்ர ஆழ்வார் என்றும் போற்றப்படுபவர். கடவுளை நாயகனாகவும் தன்னை நாயகியாகவும் பாவித்து இவர் பாடிய கீர்த்தனைகள் பலரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவை.


சுதந்திரப் போராட்டத்தில் குதித்த பல சௌராஷ்ட்ர தொண்டர்களின் வீரவரலாறுகள் வெளியில் வராமலே போய்விட்டன. காந்தியத்தில் பற்றுக் கொண்ட ஏ.ஜி. சுப்புராமனும் அவரது புதல்வர் ஏ.ஜி.எஸ். ராம்பாபுவும் மதுரை எம்பியாக தலா இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அ.தி.மு.க. அரசில் அமைச்சராக இருந்த எஸ்.ஆர். ராதா, பா.ஜ.க.வின் முன்னாள் சேலம் எம்.எல்.ஏ. லட்சுமணன், கும்பகோணம் முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஆர். ராமசாமி உள்ளிட்ட பலர் அரசியலில் பங்காற்றியுள்ளனர்.

தமிழ்த்திரைப்பட வரலாற்றில் சௌராஷ்ட்ரர்களின் பங்கு அளவிடற்கரியது. தமிழ்த்திரை இசை உலகின் அடையாளமாகத் திகழ்ந்தவர் டி.எம். சௌந்தர்ராஜன்.

பட்டு நெசவு செய்யும் சமூகத்திலிருந்து பாட்டு நெசவு செய்தவர் டி.எம்.எஸ். எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இரு சிகரங்களைத் தன் குரலால் உயர்த்திப் பிடித்தவர். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை செய்தவர்.


ஏ.எல். ராகவன் இன்னொரு சௌராஷ்ட்ர சமூகம் தந்த இசைக்கொடை. 'சீட்டுக்கட்டு ராஜா', 'என்ன வேகம் நில்லு பாமா', 'அங்கமுத்து தங்கமுத்து' உள்ளிட்ட பல பாடல்களால் தமிழ்த்திரை இசை உலகிற்கு அணி சேர்த்த ஏ.எல் ராகவன், நடிகை எம்.என். ராஜமின் கணவர் என்பது கூடுதல் சிறப்பு. எம்.என். ராஜம், எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் நாயகியாக நடித்தவர். எம்.ஆர். ராதாவுடன் நடித்த 'ரத்தக் கண்ணீர்' அவரது சினிமா வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனை.

'அத்தானும் நான் தானே', 'சித்தாடை கட்டிக்கிட்டு', 'மண்ணை நம்பி மரமிருக்கு..' போன்ற பல பாடல்களைத் தந்து தமிழர் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்த எஸ்.சி. கிருஷ்ணன் சௌராஷ்ட்ர சமூகத்தவரே.



இயக்குநர் ஸ்ரீதரால் 'வெண்ணிற ஆடை' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் செய்யப்பட்ட வெண்ணிற ஆடை நிர்மலா 100 படங்களுக்கும் மேல் நடித்து திரையுலகில் முத்திரை பதித்த தனிப்பெரும் கலைஞர்.

இலக்கிய உலகிலும் சௌராஷ்ட்ர சமூகத்து மக்கள் தனி முத்திரை பதித்துள்ளனர்.

இராமராய் என்பவர் சௌராஷ்ட்ர எழுத்தை மீட்டெடுத்தவர். அதனால் இராமராய் லிபி என்றே குறிப்பிடுபவரும் உண்டு.


'மணிக்கொடி' காலத்து முதுபெரும் எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராம். தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமை. தனது 'காதுகள்' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றுத் தந்து, தமிழை கௌரவித்தவர். இவரது 'வேள்வித் தீ' நாவல் தமிழுக்கு சௌராஷ்ட்ர சமூகம் பற்றிய பதிவாகும்.

இவரைத் தொடர்ந்து சாகித்ய அகாடமியின் சௌராஷ்ட்ர மொழிக்கான 'பாஷா சம்மான்' விருது, தமிழகத்தில் சௌராஷ்ட்ரர் வரலாறு எழுதிய கே.ஆர். சேதுராமனுக்கும் சௌராஷ்ட்ர இலக்கணம், ராமாயணம் எழுதிய தாடா. சுப்ரமணியனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

நாவல் இலக்கியத்தில் தனியொரு முத்திரை பதித்த சுபா என்ற இரட்டையர்களில் பாலகிருஷ்ணன் சௌராஷ்ட்ரம் தந்த கொடையே.

சென்ற நூற்றாண்டுவரை ஒரு ஊர் சௌராஷ்ட்ரர்கள் மற்ற ஊர் சௌராஷ்ட்ரர்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். ஆனால் இப்போது எல்லாமே மாறி கொள்வினை கொடுப்பினை வைத்துக் கொள்கின்றனர். திருமணத்தின்போது அவர்களின் வரலாற்றைச் சொல்லும் நிகழ்ச்சி மிக முக்கியமாக இடம்பெறுவது சிறப்பு. இன்றைக்கு உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் சௌராஷ்ட்ரர்கள் சகோதர பாசம்மிக்கவர்களாகவும் தமிழின் ஒரு அங்கமாகவும் விளங்குவது தமிழுக்கு உயர்வு.

நன்றி: குமுதம் 13.1.2010 இதழ்

No comments :

Post a Comment